மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டங்கள் தொடர்ச்சியான பல அடுக்கு பலன்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் மக்களுக்கு நேரடி நிதி உதவி அளிப்பது பெருமளவில் பயன் தராது என தாங்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.
அரசின் ஊக்கத் திட்டங்கள் ஒவ்வொன்றும் தொடர்ச்சியான பல அடுக்கு பலன்கள் தருவதாக இருக்க வேண்டும் என கருதியதாகவும் எனவே வங்கிகள், வணிக நிறுவனங்கள் வாயிலாக மக்களை பலன் சென்று சேரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை செய்து தர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.