கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத்( எ ) வெங்கட் பாக்கர் .இவர் சென்னையில் பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரைத்துறையிலும் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த அருண் பிரசாத் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது,ஜடையம்பாளையம் புதிய காய்கறிகள் மண்டி அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த அசோக் லேலண்ட் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனால் அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த அருண்பிரசாத் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்,காயத்ரி சுரேஷ்,சதீஸ் நடிக்கும் ” 4 G ” என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து அறிந்த இசையமைப்பாளரும்,நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் ” எப்போதும் நட்போடும்,நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குநர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு துயருற்றேன்…அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்…நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் ” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.பிரபல இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.