அமெரிக்காவில் கொரோனாவுக்கு 82,000 பேர் உயிரிழப்பு !
கொரொனா தொற்று நோயின் மையப்புள்ளியாக மாறியுள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதால் இதுவரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் தொற்று காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 16 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இத்தாலியில் பொது முடக்கத்தை தளர்த்துவது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று தேசிய அதிகாரி தெரிவித்துள்ளார். துருக்கியில் பல வாரங்களுக்குப் பின்னர் தொற்று நோயின் தாக்கம் வெகுவாக குறைந்து இருப்பதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த வார இறுதியில் நான்கு நாட்கள் பொது முடக்கம் இருக்கும் என்றும் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் தடுப்பு மருந்தை இங்கிலாந்து கண்டு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆக்ஸ்போர்டில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பள்ளிகளை விரைவில் திறக்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.இதற்கு இடையே புகை பிடிப்பவர்களுக்கு கொரொனா தொற்றும் அதனை சார்ந்த நோய்களும் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.






