கொரொனா வைரஸ் டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டதா? ஆய்வாளர் கூறும் தகவல்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் ஜனவரி மாதத்திலிருந்து தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் கடந்தாண்டு முதல் அங்கு வைரஸ் பரவி வருவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கோவிட் -19 வைரஸ் குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. சீனாவின் வூகான் நகரில் தான் கொரொனா வைரஸ் முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது.

 

அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவியது என்பது இத்தனை நாட்களாக நமக்கு சொல்லப்படும் செய்தி. ஆனால் பிரான்சில் கடந்த டிசம்பர் மாதமே ஒருவருக்கு கொரொனா தொற்று இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜனவரி மாதம்தான் பிரான்சில் முதல் தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சீனாவுடன் தொடர்பே இல்லாத ஒருவருக்கு டிசம்பரில் எப்படி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்த சூழலில்தான் பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு நாடுகளிலும் தொற்றுக்கு ஆளான 7 ஆயிரத்து 600 பேரின் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் விவரங்களை ஆராய்ந்துள்ளனர்.

 

இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு இறுதியிலேயே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பரவி உள்ளது என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் முதன் முறையாக தொற்று ஏற்பட்டது என அரசு அறிவித்த ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே அங்கு வைரஸ் பரவி உள்ளது என்றும் இவருக்கு தான் முதன்முதலில் கொரொனா ஏற்பட்டது என இந்த நாடுகளால் கண்டறிய கூட முடியாது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா வைரசின் மரபணு வேகமாக பரவும் வகையில் மாற்றம் கண்டுள்ளதாக இதில் பங்கேற்ற ஆய்வாளர் கூறியுள்ளார். கொரொனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு முடிவுகளை தெரிவிக்கின்றன. கொரொனாவுக்கான தடுப்பு மருந்து ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு அறிக்கைகள் உதவும் என்பதில் ஐயமில்லை.


Leave a Reply