“வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் பரவுகிறது கொரோனா!!” நியூயார்க்கில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு பாதிப்பு!!
அமெரிக்காவில் முதல்முறையாக வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் வீட்டில் வளர்க்கப்பட்ட 2 பூனைகளுக்கு, மனிதர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை மிகப் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா தொற்று மனிதர்கள் மூலமே மற்றவர்களுக்கும் பரவுவதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகள் மூலம் பரவியதாக முதலில் கூறப்பட்டதில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனிதர்கள் மூலம் பிற உயிரினங்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்றுக்கு உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்து வரும் நகரமாக திகழும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காட்டு விலங்குகளுக்கு மட்டுமின்றி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற மான்ரிக்ஸ் மிருகக்காட்சி சாலையில் 4 வயது புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தான் உலகிலேயே கொரோனா தொற்று மிருகங்களுக்கு முதல் முறையாக பரவியது என்று கூறப்பட்டது. தொடர்ந்து அதே மிருகக்காட்சி சாலையில் மேலும் 4 புலிகள், 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அந்த மிருகக் காட்சி சாலையே இப்போது மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அதே நியூயார்க் நகரில் பரவியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட 2 பூனைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில், அந்த வீட்டில் வசிக்கும் மனிதர்கள் மூலமே இந்த தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் மனித உயிர்களை மட்டுமே இதுவரை காவு வாங்கியுள்ள கொரோனா அரக்கன் இப்போது காட்டு மிருகங்கள் மற்றும் வீட்டு செல்லப் பிராணிகளையும் விட்டு வைக்கவில்லை என்ற தகவல் பீதியை மேலும் அதிகரித்துள்ளது.






