பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை நள்ளிரவில் தாக்கிய மர்ம நபர்கள்..! காங்கிரசார் மீது புகார்!!
பிரபல ஊடகவியலாளரும், ரிபப்ளிக் ஆங்கில செய்தி சேனலின் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அர்னாப் விமர்சித்ததால் இளைஞர் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
மும்பையில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல ரிபப்ளிக் ஆங்கில செய்தி சானலின் தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் அர்னாப் கோஸ்வாமி . ஊடக விவாதங்களை நடத்துவதில் ரொம்பவே பிரபலமானவர். நேற்று நள்ளிரவில் மும்பை அலுவலகத்தில் இருந்து தனது மனைவியுடன் அர்னாப் கோஸ்வாமி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய காரை பின் தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த இரு மர்ம நபர்கள் காரை வழிமறித்துள்ளனர். பின்னர் அர்னாப் கோஸ்வாமியை சரமாரியாக தாக்கியதுடன் காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்புக்காக பின்னால் ஒரு காரில் வந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் ஓடி விட்டனர். உடனடியாக காவல் நிலையம் சென்ற அர்னாப் தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக புகார் செய்தார். அதில், இந்த தாக்குதலை நடத்தியது இளைஞர் காங்கிரசார் என்றும் இவர்களை தூண்டி விட்டதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாகவும் புகாரில் அர்னாப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் என்ற இடத்தில் சாதுக்கள் இருவர் மர்மக் கும்பலால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் டிவி விவாதத்தின் போது, இந்த படுகொலையின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா இருப்பதாக அர்னாப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார், இதன் காரணமாகவே அர்னாப் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.






