கொரோனா நிதி : கேரளாவில் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30% கட்..! அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளமும் பிடித்தம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ள கேரளாவில், நிவாரண உதவிக்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ளோர் வரை அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு 30% குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல், அனைத்து அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளமும் 5 தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலம் கேரளா தான். அதே போல் அதிதீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் கேரளா தான் திகழ்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மக்களின் வெளிநடமாட்டத்தை குறைக்க அம்மாநில அரசு, ஏக கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்தது. அதே நேரம் ஊரடங்கால் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசியப் பொருட்களையும் அம்மாநில அரசு கொண்டு சேர்த்தது. இதனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு இப்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். இதற்கு ஆளும் இடதுசாரி அரசு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் ஒரணியில் நின்று ஒத்துழைப்பு கொடுத்ததும் காரணமாகும்.

 

இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஓரளவு பாதிப்பு உள்ள 4 மாவட்டங்கள் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது என்றும் சொல்லலாம். ஆனால் இப்படி கொரோணா ஒழிப்பில் தீவிரம் காட்டிய கேரள அரசுக்கு, மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்காததால் கடும் நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது.

 

இதையடுத்து, கொரோனா நிவாரண நிதி திரட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் 30 சதவீதத்தை ஒரு வருடம் வரை கொரோனோ நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்யப்படும் என்பது தான் அந்த உத்தரவு .அது மட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியமும் பிடித்தம் செய்யப்பட உள்ளது. இந்த ஒரு மாத ஊதியம் 5 தவணைகளாக பிடித்தம் செய்யப்படும் எனவும், மாநிலத்தின் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ஒரு மாத ஊதியத் தொகை திரும்ப வழங்கப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவாதம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply