மனைவி நடத்தையில் சந்தேகபட்ட கணவனை மகனுடன் சேர்ந்து விறகு கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. 40 வயதான குமார் தற்போது உயிருடன் இல்லை. தனது மனைவியை சந்தேகப்பட்டதே இவர் உயிர் போக காரணமாக அமைந்துவிட்டது என்கிறது காவல்துறை. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூர் அருகே உள்ள ஆனைமலை கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குணா.

 

இவருடைய மனைவி 35 வயதான ராஜம்மாள். இவர்களுக்கு 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாளுக்கும், கணவரின் அண்ணன் சேட்டு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் 2017 ஆம் ஆண்டு தனது அண்ணனை பறவைகள் சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் கடந்த நான்காம் தேதி கானாமலை கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 

பிரேத பரிசோதனை அறிக்கையில் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் ஊர் மக்களிடம் நடத்திய விசாரணையில் குமாரும் அவரது மனைவியும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. குமாரின் மனைவி ராஜம்மாள் மூத்தமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் இணைந்து குமாரை கொன்றதை ஒப்புக் கொண்டனர்.

 

ராஜம்மாள் எப்போதும் வீட்டில் மறைவாக நின்றுகொண்டு அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். கிராமத்தில் சிலருடன் ராஜம்மாளுக்கு தொடர்பு இருந்ததாக குமார் சந்தேகப்பட்டு வந்தார், அதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார் குமார். மேலும் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது .விரக்தி அடைந்த ராஜம்மாள் தனது மூத்த மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

 

இதற்கிடையே கடந்த மூன்றாம் தேதி இரவு குடிபோதையில் வந்த குமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் வீட்டிலிருந்த விறகு கட்டையால் கணவரை கடுமையாக தாக்கினார் ராஜம்மாள். படுகாயம் அடைந்த குமார் மயக்கம் அடைந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார் .சிறிது நேரத்தில் அங்கேயே குமாரின் உயிர் பிரிந்துள்ளது.

 

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தால் குமாரின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் ராஜம்மாள் திகைத்து உள்ளார். பின்னர் அவரும் அவரது மகனும் சேர்ந்து குமாரின் கை கால்களை கட்டி கயிற்றால் இழுத்து சென்று பக்கத்து தோட்டத்தில் போட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்த ஜமுனாமரத்தூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சந்தேகத்தால் தினமும் சித்திரவதை செய்து வந்த கணவரை விறகு கட்டையால் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் ஜமுனாமுத்தூர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply