கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம்..!ஊரடங்கு உத்தரவால் எளிய முறையில் நடந்தது!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமியின் திருமணம் இன்று நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமிக்கும், அம்மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஏப்ரல் 17-ந் தேதி (இன்று) திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திருமணத்தை பெங்களூருவில் மிக ஆடம்பரமாக நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்திருந்தனர்.

 

ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிகில் குமாரசாமியின் திருமணத்தை திட்டமிட்ட தேதியில் பெங்களூருவுக்கு வெளியே, ராமநகரா மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று காலை நடைபெற்றது.

 

இந்தத் திருமணத்தில் மணமகன் நிகில், மணமகள் ரேவதி ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 60 முதல் 70 பேர் வரை மட்டுமே பங்கேற்றதாகவும், சமூக இடைவெளி பின்பற்றி விழாவில் பங்கேற்றோர் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இந்தத் திருமணத்தில் பத்திரிகை மற்றும் மீடியாக்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

 

கொரோனா வைரஸ் பீதி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக தனது மகன் நிகில் குமாரசாமியின் திருமணத்தை. திட்டமிட்ட நாளில் எளிமையாக நடத்த வேண்டியதாயிற்று. பிரமாண்டமான முறையில் அனைவரையும் அழைத்து திருமணத்தை நடத்த வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன். ஆனால் சூழ்நிலை காரணமாக எளிமையாக நடத்தப்பட்டுள்ளது. எனவே கட்சியினர் யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லையே என வருத்தப்பட வேண்டாம், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என குமாரசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, ஊரடங்கு கட்டுப்பாடு உள்ள நிலையில், திருமணம் நடத்த அனுமதி கொடுத்தது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார். குறைந்த உறுப்பினர்களே திருமணத்தில் பங்கேற்பதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் எனவும் உறுதி கொடுக்கப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டது. திருமண நிகழ்ச்சி முழுவதும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விதிமீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடியூரப்பா தெரிவித்தார்.


Leave a Reply