நம்மூர் அரசியல்வாதிகளை மிஞ்சிய அமெ., அதிபர் டிரம்ப்..! கொரோனா நிவாரண செக்கில் தனது பெயரை அச்சிட உத்தரவிட்டதால் சர்ச்சை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நம்மூர் அரசியல்வாதிகள் தான் மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள், உதவிகள், நிவாரணப் பொருட்களில் தங்கள் பெயர் புகைப்படத்தை அச்சிட்டு விளம்பரம் தேடுவது வாடிக்கை என்றால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதையெல்லாம் மிஞ்சிவிட்டார். கொரோனா நிவாரணமாக அமெரிக்க ஜனங்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிதியுதவிக்கான காசோலைகளில் டிரம்ப் தனது பெயரை பொறிக்க உத்தரவிட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

உலகை மாபெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ், மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் உலகின் வல்லரசான அமெரிக்கா சின்னாபின்னமாகி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் 28 ஆயிரத்தை கடந்து உலகின் மொத்த பாதிப்பில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 5ல் ஒரு பங்கு என 20% சதவீத பாதிப்பால் அந்நாடு படு திண்டாட்டத்தில் உள்ளது.

 

கொரோனாவால் அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 50 மாகாணங்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான நியூயார்க் தான் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அமெரிக்காவின் மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு நியூயார்க் நகரில் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை, ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்டு அந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால், கொரோனா நிவாரணமாக நம்ம ஊரில் குடும்பத்திற்கு 1000 ரூபாய் வழங்குவது போல அமெரிக்காவில் குடும்பத்திற்கு 1200 டாலர்( இந்திய மதிப்பில் 91,000 ரூபாய்) மற்றும் குழந்தைகளுக்கு தலா 500 டாலர் என மொத்தம் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப் .இந்த நிவாரணம் காசோலையாக வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்த நிலையில், மக்களிடம் இந்த நிதி உதவி சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

கடைசியில், தாமதத்திற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் காசோலைகளில், அதிபர் டிரம்ப் தனது பெயரை கொட்டை எழுத்துகளில் பொறிக்க வேண்டும் என உத்தரவிட்டது தான் என தெரிய வந்து இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அமெரிக்க சரித்திரத்தில் இப்படி உதவி வழங்கும் போது அதிபர் பெயரையோ, மற்ற அரசியல் கட்சி தலைவர் அல்லது ஆட்சியாளர்களின் பெயர் பொறிப்பது வழக்கம் கிடையாது.

 

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். இதனால் நம்ம நாட்டு அரசியல்வாதிகள் தான் எந்த உதவி என்றாலும் பெயர், படத்தை போட்டு விளம்பரம் செய்வது போல, டிரம்ப்புக்கும் விளம்பர ஆசை வந்துவிட்டது போல் தெரிகிறது. ஆனால் கொரோனாவால் சரித்திரம் காணாத பேரிழப்பை சந்திக்கும் வேளையில், டிரம்ப் இப்படி தனது பெயரை பொறிக்க உத்தரவிட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.


Leave a Reply