ஊர்க்காவல் படையினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கோவை கமிஷனர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

 

அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பும் மக்கள் அரசு அறிவித்துள்ள நேரத்தில் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் 144 தடை உத்தரவினை மீறி பொது மக்களில் சிலர் தேவையின்றி சாலைகளில் உலா வருகின்றனர்.அவர்களை காவல் துறையினர் அறிவுரை கூறி வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.அதனையும் மீறி பொது வெளியில் சுற்றித்திரிபவர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தும்,வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் காவல் துறையினரின் பங்கு அளப்பரியது.தன் உயிரினை துச்சமென மதித்து பொது மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு நன்றியினை தெரிவித்தால் மட்டும் போதாது.அவர்களது வேண்டுகோளின் படி வீட்டில் இருந்தாலே போதுமானது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு உறுதுணையாக ஊர்க்காவல் படையினரும் சேவைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊர்க்காவல் படையினரை கெளரவிக்கும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊர்க்காவல் படையினருக்கு 12 வகையான வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பைகளை கோவை கமிஷனர் சுமித் சரண் மற்றும் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தனசேகர் பொருட்களை வழங்கினர்.இதில் காவல் உயரதிகாரிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

 

இதுகுறித்து கோவை கமிஷனர் சுமித் சரண் கூறுகையில் , காவல்துறையினருடன் இணைந்து நேரம் காலம் பார்க்காமல் ஊர்க்காவல் படையினர் சேவை செய்து வருகின்றனர்.அவர்களது சேவையை பாராட்டும் விதமாக 400 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பொருட்களை வழங்கியதாக தெரிவித்தார்.


Leave a Reply