கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் இனி மதிய உணவுடன் முட்டையும் இலவசமாக வழங்கப்படும் — அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கோவையில் இதுவரை வெளிநாடு சென்று திரும்பியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 2,150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1330 பெயருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 

694 நபர்களின் மாதிரிகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது. 126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்கள் என 1008 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

 

மேலும்,கோவை மாவட்டத்தில் ஆனைமலை , பொள்ளாச்சி வடக்கு , பொள்ளாச்சி தெற்கு , மதுக்கரை , கிணத்துக்கடவு , வடமதுரை , அன்னூர் சிறுமுகை , மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும், கோவை மாநகரில் சுந்தராபுரம் , குனியமுத்தூர் , உக்கடம் , பூ மார்க்கெட் ஆர்.எஸ்.புரம் , கே.கே புதூர் , கவுண்டம்பாளையம் , போத்தனூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை . இப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும் , கோவையில் கொரோனா பரிசோதனை செய்ய 7 கருவிகள் உள்ளன. கோவையில் 2275 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. 387 செயற்கை சுவாச கருவிகள் தயாராக உள்ளது. தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் 13 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,96% குடும்ப அட்டை தாரர்களுக்கு தற்போது ரூ.ஆயிரம் மற்றும் ரேஷன் பொருட்கள் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் , அதேபோல் நடைபாதை வியாபாரிகள் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

மேலும் , கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதிய உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு முட்டையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் கூடுதலாக முட்டை வழங்கப்படும். 7300 பேர் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தினமும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிடுகின்றனர்.

 

இதுவரையில் 15 அம்மா உணவகங்களிலும் சேர்த்து 1.12 லட்சம் பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்களுக்கு , மக்களுக்கு 15 மேற்பட்ட சமுதாய கூடங்களில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது எனவும் , காய்கறிகள் வாகனங்களில் எடுத்து சென்று வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் , சாலையோர வியாபாரிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 4888 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும். மக்கள் 95% பேர் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். முழுமையான ஒத்துழைப்பு தேவை. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் கொரோனா அதிகம். இந்த 15 நாள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் இயல்பு வாழ்கைக்கு நாம் திரும்ப முடியும் எனவும் , கோவையில் வெளியே செல்பவர்களை 30 நிமிடங்கள் வெளி நிற்க வைக்க வேண்டாம் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வராதபடி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள்.வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply