ஏப்.20-ந் தேதிக்குப் பின் பல்வேறு துறைகளில் ஊரடங்கில் தளர்வு..! மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாடு முழுவதும் 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு பல்வேறு துறைகளில் ஊரடங்கில் தளர்வு செய்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. நேற்று நள்ளிரவுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்டமாக மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என்றும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசுத்தரப்பில் இன்று வெளியிடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

 

அதன்படி நாடு முழுவதும் எந்தெந்த துறைகளில் ஊரடங்கு தொடரும் என்றும், எவற்றுக்கு தளர்வு என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரகப்பகுதிகளில் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில் சார்ந்த தொழில்களுக்கு தடையில்லை. விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்யும் அனைத்து மண்டிகளுக்கும் அனுமதி .

 

வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி .100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகளை தொடரலாம். ஆனால் பணியாளர்கள் வேலைக்கு செல்லும் போது, மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம். கட்டிட வேலைகள் நடைபெற அனுமதி . ஆனால் பணியாளர்கள் அங்கேயே தங்கி பணிகளை தொடர வேண்டும்.

 

பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோருக்கும் அனுமதி . ஏப்ரல் 20-ந் தேதி முதல் மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம். 50 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி. ஆனால் பணியாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

 

நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்கலாம் . நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்கவும் அனுமதி. அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.ஏப்ரல் 20 முதல் கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்.

 

ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கட்டுப்பாடு.

 

மே 3-ந்தேதி தடை நீட்டிப்பு துறைகள் :
———————————
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்து வந்த இடங்களைச் சுற்றி முடக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்வு பொருந்தாது.

 

மே 3-ந்தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும். பேருந்து, ரயில், விமான போக்குவரத்துக்கான தடையும் மே 3-ந்தேதி வரை நீடிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


Leave a Reply