மாஸ்க் அணியவில்லையா? ரூ.500 அபராதம் கட்டு..! சென்னையில் போலீஸ் கெடுபிடி அபராதம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் ; இல்லையேல் வாகனம் பறிமுதல் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்த நிலையில், மாநகர காவல் துறையினர் ரூ.500 அபராதம் வசூல் செய்யத் தொடங்கி விட்டனர்.

 

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனாலேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, தேவையின்றி ஊர் சுற்றியவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும், வாகனங்களை பறிமுதல் செய்வதும், நூதன தண்டனைகள் வழங்குவதும் என போலீசார் கெடுபிடி செய்தனர். இதனால் இப்போது சாலைகளில் அநாவசியமாக சுற்றுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

 

இந்நிலையில், இப்போது வெளியில் கிளம்பினாலே முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவுகள் பறக்க ஆரம்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று பிறப்பித்த உத்தரவில், வீட்டை விட்டு வெளியில் வந்தால் மாஸ்க் கட்டாயம். இல்லையேல் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தார். இதே போன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடியும், வீட்டில் இருந்தாலும் முகக் கவசம் அணியுங்கள் என்று வலியுறுத்தினார். இதனிடையே சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப் படும் என அறிவித்தார்.

 

இந்த அறிவிப்பு வெளியான சென்னை நகரில் போலீசார் கெடுபிடியை தொடங்கினர். மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் மட்டுமின்றி “சும்மா” நடந்து சென்றவர்களையும் சுற்றி வளைத்து ரூ.500 அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, வெளியில் வாகனத்தில் சென்றாலும் , நடந்து சென்றாலும் முகக் கவசம் அவசியம் மக்களே.. இல்லாவிட்டால் பாக்கெட்டில் அபராதம் கட்ட ரூ.500 கொண்டு செல்லுங்கள் மக்களே என்கின்றனர் காவல் துறையினர் .


Leave a Reply