அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்ததா இந்தியா? மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் முடிவு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மனிதாபிமான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் ,பாராசிட்டமால் மாத்திரைகளை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாத்திரைகளை சப்ளை செய்யாவிடில் தக்க பதிலடி கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மறுநாளே இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியா சிகிச்சைக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் ஓரளவுக்கு இந்த வைரஸை கட்டுப்படுத்துவதாக அமெரிக்கா நம்புகிறது. ஆனால் இந்த மாத்திரைகளுக்கும் அமெரிக்காவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மாத்திரையை அமெரிக்காவுக்கு அதிகம் சப்ளை செய்து வருவதே நம் இந்தியாதான்.

 

ஆனால், இந்தியாவிலும் கொரோனா புயல் வீச ஆரம்பித்ததால், முன் ஜாக்கிரதையாக வெளிநாடுகளுக்கு இந்த மாத்திரையை ஏற்றுமதி செய்வதை இந்தியா கடந்த ஒரு மாதமாக அடியோடு நிறுத்திவிட்டது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கி அமெரிக்காவை காப்பாற்றுமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவும் தமது கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புவதாக அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

 

ஆனால், இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் விஸ்வரூபமெடுத்துள்ளதால், மாத்திரைகளை வழங்க இந்தியா சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது . அமெரிக்காவிலோ நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கமான தனது பெரிய அண்ணன் போக்கை கையாண்டார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைக்காக அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தன.. அதன்படி இந்தியா சப்ளை செய்ய வேண்டும்.

 

ஒப்பந்தத்தை மதித்து சப்ளை செய்தால் இந்தியாவை பாராட்டுவேன். அப்படி சப்ளை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமோ தக்க பதிலடியை இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் என மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்ப்பின் இந்த மிரட்டல் இரு நாடுகளிடையே திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும்,ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை சப்ளை செய்து உதவுமாறு இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் கெஞ்சாத குறையாக இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தன.

 

இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோ குயின், பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்க அதிபரின் மறைமுக மிரட்டலே, இந்தியாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply