சாராய வியாபாரிய விட்டுட்டு டீ வியாபாரியை பாடாய்படுத்தும் போலீஸ்காரர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார மலை கிராமங்களில் தங்குதடையின்றி சாராயம் காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து வந்து ஊருக்குள் விற்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் சாராயம் காய்ச்சும் நபர்களை இதுவரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து காவல்துறையினர் தண்டனை கொடுத்தது இல்லை.

 

அண்மையில்கூட சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சாராய வியாபாரியை பிடித்து மீடியாக்களிடமோ, பொதுமக்கள் மத்தியிலும் இருக்க வைக்கவில்லை. கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கூட ரகசியமாக முகத்தை மூடி தான் வேலூர் காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றன.

 

அதேபோல 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னரும் அடங்காமல் ஊர் சுற்றும் நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் எச்சரித்து மட்டுமே அனுப்பி வந்த காவல்துறையினர் திடீரென தண்டனை கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

குடியாத்தம் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு கேன்களில் டீ விற்கும் நபர்கள் தான் காரணம் என்று அவர்களில் 11 பேரை பிடித்து வந்து டீயை தலையில் சுமக்க வைத்து ஏதோ பரம்பரை சாராய வியாபாரிகளை பிடித்து சாராயக்கடைகளை தலையில் வைத்திருப்பது போல போஸ் கொடுக்க வைத்தது தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

 

சாராய வியாபாரிகளை இதுபோல் பகிரங்கப்படுத்த வேண்டிய போலீசார் வயிற்றுப் பிழைப்புக்கு அதுவும் ஹோட்டல்கள் கடைகள் இயங்க அனுமதித்த நேரத்தில் டீ விற்று அவர்களை தண்டிப்பது என்ன விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரொனா பரவுதலை கட்டுப்படுத்த தனிமனித விலகல் அவசியம் என்பது மறுப்பதற்கில்லை.

 

ஆனால் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரியும் சாராய வியாபாரிகள் அட்டகாசத்தை ஒடுக்குவது முக்கியம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


Leave a Reply