ஈரோட்டில் ஒரு லட்சம் பேர் கொரொனா கண்காணிப்பில் உள்ளனர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரொனா பாதித்த முதல் 5 மாவட்டங்கள் பட்டியலில் ஈரோடு மாவட்டம் உள்ளது. அங்கு இதுவரை 32 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த 2 பேர் உட்பட 3 பேருக்கு முதன் முதலில் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 28 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து உறவினர்கள் 3 பேருக்கு கொரொனா தொற்று பரவியது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முழுவதுமாக 32 பேருக்கு கொரொனா உறுதியானது. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரொனாஅறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

இதனால் அந்த மாவட்டத்தில் தாக்கம் அதிகளவில் இருப்பதாக உணரப்படுகிறது. இதனையடுத்து கொரொனா பாதித்தவர்கள் சென்று வந்த கொல்லம்பாளையம் சுல்தான்பேட்டை வீரப்பன்சத்திரம் என இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

இப்பகுதிகளில் வசித்து வரும் 29 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளில் தனிமையில் இருப்பவர்களுக்கு பல்வேறு வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தாலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

 

இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை இதில் அடங்கும். அதேநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது.


Leave a Reply