மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளின் நேரம் குறைப்பு..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


தமிழகத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி மட்டுமே திறந்திருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பால் மற்றும் மருந்துக்கடைகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் காய்கறி மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் திறந்திருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், முதியவர்கள், நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க தனியார் மருத்துவமனைகள் முன் வரவேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை கைவிட வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் சாதி, மதம், இனம் பாராமல் அனைவரையும் தொற்றக்கூடிய ஒன்று எனவும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply