கொரானா முன்னெச்சரிக்கை : ஆசிரியர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்ததைப் போல், ஆசிரியர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது குறித்து இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா. அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திரையரங்குகள் மூடல், அரசு பொது நிகழ்ச்சிகள் ரத்து, ரயில் நிலையங்கள் பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமிநாசினியை தெளித்தல், மருத்துவ மனைகளில் 24 மணி நேரமும் தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு மையங்களை அமைத்து கண்காணித்து வருவது வரவேற்கத்தக்கது.

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் 10, 11, 12,ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பதால் அவர்களுக்கு கிருமிநாசினியை தெளித்து மாணவர்கள் ஆசிரியர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் அங்கன்வாடி மையம், எல்.கே.ஜி முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க கேட்டுக்கொண்டோம். அதனை அப்படியே ஏற்று விடுமுறை அளித்ததை வரவேற்கிறோம்.

 

அதேபோன்று, கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு 6 நாட்கள் தற்செயல் விடுப்பு அளித்துள்ளதும் உண்மையாகவே வரவேற்கத்தக்கது.

 

இதனை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தற்செயல் விடுப்பு வழங்கிட தமிழக முதல்வர் அவர்களையும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என சா.அருணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply