ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சீனாவை சேர்ந்த மூன்று வங்கிகளுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. கடன் கொடுத்த நிறுவனங்கள் அனில் அம்பானி மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது அனில் அம்பானியின் மகன் அன்மோல் ஆஜராகியிருந்தார்.
அனில் அம்பானி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் அவருக்கு சொத்து இல்லை என்று தெரிவித்தார். இவ்வழக்கில் தம்மால் பணம் தர இயலாது என்ற அனில் அம்பானியின் வாதங்களை நீதிபதி நிராகரித்துள்ளார். சுமார் 715 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை 6 வார காலத்திற்குள் செலுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனி ஜெட் விமானம், வகைவகையான சொகுசு கார்கள், தனி படகு என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் அணில் அம்பானி தனது பெயரில் சொத்து நிலவரம் பூஜ்ஜியம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.