திருவாடானை அருகே 274 பேருக்கு ரூ. 3.86 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 274 பயனாளிகளுக்கு ரூ.3,86,07,305 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்
வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது: மக்களைத் தேடி அரசு என்ற கூற்றிற்கு ஏற்ப பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடித் தீர்வு காணும் விதமாக மாதம் தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு இதுவரை நமது மாவட்டத்தில் 9,300 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பாரதப் பிரதமர் விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டிற்கு தலா ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.528 கோடி மதிப்பிலும், 2017-2018-ஆம் ஆண்டில் ரூ.478 கோடி மதிப்பிலும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. 2018-2019-ஆம் நிதியாண்டில்
முதற்கட்டமாக 183 வருவாய் கிராமங்களில் ரூ.175 கோடி பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள விவசாயிகளுக்கும் விரைவில் பயிர்காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் 1500 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.ஒரு லட்சம் மானியமாக அரசின் மூலம் வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நமது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஸ்கோட்ச் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், திருவாடானை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முகம்மது முக்தார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply