ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்கிற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று கார்ப்பரேட் அணுகுமுறையுடன் மத்திய அரசு அறிவித்திருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேளாண் மண்டலமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை பாழ்படுத்தி இரசாயன மண்டலமாக அறிவிக்கும் வகையில் பின்னடைவான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தி இந்த அனுமதிகள் தமிழகத்தில் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்திற்கு உள்ளாக்கும் என்று திமுக தலைவர் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தன்னுடைய அறிக்கையில் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற இன்று கூட இருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.






