பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். டெல்லியில் இன்று கூடும் பாஜக கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
கடந்த 2014-ல் முதல் தடவையாக மோடி பிரதமரானவுடன் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். தலைவர் பதவி வகித்த கடந்த ஐந்தரை வருடங்களில் அமித் ஷா வகுத்த வியூகங்களால் பல மாநிலங்களில் பாஜக கால் ஊன்றியது.குறிப்பாக பாஜகவுக்கு அடித்தளமே இல்லாத வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மே.வங்கத்தில் அக்கட்சியின் செல்வாக்கு உயர அமித்ஷா வகுத்த அதிரடி திட்டங்களே காரணம்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் என்னென்னவே வியூகங்கள் வகுத்தும் தாமரையை மலரச் செய்ய முடியாவிட்டாலும், கட்சியை ஓரளவுக்கு மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது என்றே கூறலாம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யான அமித் ஷா, உள்துறை அமைச்சராகி விட்டார். இதனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற பாஜக கட்சி விதிகள் படி அமித் ஷா தலைவர் பதவியை துறக்க வேண்டி வந்தது. ஆனால், ஜார்க்கண்ட், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருந்ததால், அமித் ஷா தலைவர் பதவியில் நீடிக்க, ஜே.பி.நட்டா செயல் தலைவரானார்.
தற்போது உள்துறை அமைச்சர் பொறுப்பில் கூடுதல் பணிச்சுமை காரணமாக தலைவர் பதவியிலிருந்து அமித் ஷா விலக முடிவு செய்து விட்டார். இதனால் இன்று பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில பாஜக தலைவர்கள் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில், பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஒரு வேளை தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட்டால் நாளை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை ஜே.பி.நட்டா தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உடனடியாக தேசிய தலைவர் பதவியை ஏற்பார் என்று தெரிகிறது.






