ஆஸி.க்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி : ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!!

ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. முதல் போட்டியில் பெற்ற படுதோல்விக்கு இன்றைய போட்டியில் பழி தீர்க்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பங்கேற்றுள்ளன. கடந்த 14-ந் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கத் தவறினர். ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் தவிர்த்து பிற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் ஆல் அவுட்டாகி 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

 

தொடர்ந்து, பந்து வீச்சிலும் இந்திய வீரர்கள் திறமை காட்டத் தவறினர். இதனால் ஆஸி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்ததால் இந்திய பந்து வீச்சாளர்கள் சரணாகதி அடைந்தனர். வார்னரும், பிஞ்ச்சும் மளமளவென ரன்கள் குவித்து,தங்கள் பங்குக்கு இருவரும் சதம் விளாசியதுடன், ஆஸி. அணியும் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இன்று ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில், தொடரை தக்க வைக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய இக்கட்டில் இந்தியா களம் காண்கிறது. இன்றைய போட்டியில் வென்றால் 1-1 என தொடரை சமன் செய்து கடைசிப்போட்டியிலும் வெற்றிக்கு போராடலாம்.இல்லையேல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த சோகத்துக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். கடந்த மும்பை போட்டியில் தலையில் அடிபட்ட இநதிய அணியின் விக்கெட் கீப்பருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் கீப்பிங் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply