உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டமாக மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் என 5 பதவிகளுக்கு, மொத்தம் 10,306 பேரை தேர்வு செய்ய இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட, ஒன்றிய பதவிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் 314 ஒன்றியக் குழு தலைவர்களை தேர்வு செய்வதற்கான மன்றமுகத் தேர்தல் நடைபெறுகிறது. 1 மணி வரை, ஏற்கனவே கவுன்சிலர்களாக சட்டுப் போட வேண்டும். 1 மணிக்கு இந்த ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவும் உடனே அறிவிக்கப்படும்.
மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராம ஊராட்சிகளின் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. மாலையே முடிவும் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் பதவி தவிர்த்து மற்ற 4 பதவிகளுக்கும் கட்சிகள் அடிப்படையில், மறைமுகத் தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தப்பதவிகளைக் கைப்பற்ற திமுகவும் அதிமுகவும் மல்லுக்கட்டுகின்றன. பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காக மாற்றுக் கட்சி மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை குதிரை பேரம் நடத்தியும், மிரட்டல் மூலம் கடத்தியும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் சர்ச்சைகளும், அடிதடிகளும், கோர்ட் வழக்குகளும் என பிரச்னைகள் வெடித்தன.
இன்றும் தேர்தலின் போது பல இடங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.