பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் நான்காம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதனை எதிர்த்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லுமா என ஆராய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் இருந்து வந்துள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினர் இந்திய குடியுரிமை பெறலாம் எனவும் ஜனவரி பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் எனவும், ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.






