அமைதியையே அமெரிக்கா விரும்புகிறது..!ஈரான் மீது பதிலடி தாக்குதல் இல்லை..! போர்ப் பதற்றத் தணித்த டிரம்பின் உரை!!

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என்றும், பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கையோ ஏவுகணை தாக்குதலோ நடத்த விரும்பவில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

ஈரான் நாட்டின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியை குறிவைத்து, ஆளில்லா விமானம் மூலம் தீர்த்துக் கட்டியது அமெரிக்கா. இதற்கு பழிக்குப் பழியாக ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஈரான்.

 

இதில்80-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஈரானின் இந்த பதிலடி தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது.

 

ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து கொக்கரித்த ஈரான் மதத் தலைவர் கொமேனி, அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம். இன்னும் தாக்குதல் தொடரும் என அமெரிக்காவை சூடேற்றுமாறு கூறியிருந்தார்.

 

ஆனால், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ரியாக்ஷன் வேறு மாதிரியாக இருந்தது. ஆல் இஸ் வெல் என கூலாக டுவிட்டரில் பதிவிட்ட டிரம்ப், நாட்டு மக்களிடையே விரிவாக உரையாற்ற உள்ளதாகவும் கூறியிருந்தார்.

 

அதன்படி வெள்ளை மாளிகையில் இருந்தபடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது.

 

அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது.

 

ஈரானின் செயல்களை ஒரு போதும் சகிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

 

உலக நாடுகளும் ஈரானை தனிமைப்படுத்த முன்வர வேண்டும் ஈரானுக்கு எதிராக ராணுவத்தையோ, ஏவுகணை தாக்குதலோ நடத்த அமெரிக்க விரும்பவில்லை.
உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டவே அமெரிக்கா விரும்புகிறது என டிரம்ப் தெரிவித்தார்.

 

ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்ற ரீதியில் டிரம்ப் ஆவேசமாக உரையாற்றப் போகிறார், இதனால் போர்ப் பதற்றம் அதிகரிக்கலாம் என்றே உலக நாடுகள் எதிர்பார்த்திருந்தன.

 

ஆனால் போரை விரும்பவில்லை. உலகம் முழுதும் அமைதியை நிலை நாட்டவே அமெரிக்கா விரும்புகிறது என அவர் பேசியிருப்பதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Leave a Reply