“உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது திட்டமிட்டபடி வரும் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

 

இந்நிலையில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடத்தப்படும் தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை முடிவை அறிவிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் இரண்டாம் தேதி ஊரகப் பகுதிகளுக்கு இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டு, தடை கோரும் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.


Leave a Reply