அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மோசடி வழக்கு

திரைப்படங்களில் நடிக்க வந்து விட்டாலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். அண்மையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் மோசடி செய்ததாக நடிகை ஷாலினி பாண்டே மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

தெலுங்கு மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்றதால் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில், இந்த படத்தின் நாயகியான ஷாலினி பாண்டேவிற்க்கும் வாய்ப்புகள் குவிய தொடங்கின.

 

அப்படி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, மூடர்கூடம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் அக்னிசிறகுகள் படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

ஆனால் இந்த படத்தில் இருந்து பின்னர் ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்ஷரா ஹாசன் நடிக்க படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்த நிலையில்தான் திட்டமிட்டது போன்று கால்சீட் கொடுக்காமல் நடிகை ஷாலினி பாண்டே அலைக்கழித்ததாகவும் அதனாலேயே மாற்று நடிகையை வைத்து படத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஹிந்தி படத்தில் கமிட்டாகி விட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்றும் தாம் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று ஷாலினி பாண்டே தெரிவித்ததாகவும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து ஷாலினி பாண்டே மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தங்களுடைய நோக்கம் ஷாலினி பாண்டேவை அசிங்கப்படுத்துவது கிடையாது என்று கூறியுள்ள தயாரிப்பு தரப்பு அவரை வைத்து சூட் செய்து பணவிரயம் ஆன நாட்களுக்கான செலவை தங்களுக்கு திருப்பிக் கொடுத்தால் வழக்கை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.


Leave a Reply