திமுக இன்று நடத்தும் பேரணியை வீடியோ பதிவு செய்க..! – உயர்நீதிமன்றம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் பேரணி நடைபெற்றால் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பேரணிக்கு தடை கோரி இந்தியர் மக்கள் மன்ற தலைவர் வாராகி, ஆவடியை சேர்ந்த எழிலரசு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு முன்பு நேற்று இரவு 9.20 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திமுக நடத்தும் பேரணிக்கு அனுமதி கோரி சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் மதன்மோகன் கடந்த 18ம் தேதி காவல்துறைக்கு மனு அளித்ததாக தெரிவித்தார்.

 

எனினும் பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வர்? எழுப்பப்படும் முழக்கங்கள் என்ன? குடியுரிமை சட்டத் திருத்தத்தின் நகல் எரிக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்றும், பேரணியின்போது வன்முறை ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அவர் பொறுப்பு ஏற்பாரா என்ற கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றார்.

 

இதையடுத்து ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் காவல்துறை நிபந்தனைகளை திமுக ஏற்றால் அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் காவல்துறை கேள்விக்கும் திமுக பதில் அளிக்காததால் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் புதிய விண்ணப்பம் மீதான பரிசீலனை குறித்து தற்போது கூற முடியாது என்றார்.

 

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், விரும்பத்தகாத சம்பவங்களால் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் விளையாட நீதிமன்றம் விரும்பவில்லை என்ற நீதிபதிகள் பேரணி முழுவதையும் டிரோன் போன்ற அதிநவீன சாதனங்கள் மூலம் காவல்துறை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்றனர். அப்போதுதான் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் கட்சி தொண்டர்களை பொறுக்காமல், அதன் தலைவர்களை பொறுப்பாக்க முடியும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

 

வாராகி மற்றும் எழிலரசு ஆகியோரின் வழக்குகள் குறித்து தமிழக உள்துறை செயலாளர் டிஜிபி சென்னை காவல் ஆணையர், திமுக தலைவர் மு க ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவுகளை அனுசரித்து பேரணி நடத்தப்படும் என்றார். பேரணிக்கு நீதிபதிகள் தடை விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply