குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கத்தினர் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
நல்லகண்ணு தலைமையில் சின்ன மலையிலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றவர்களை சிறிது தூரத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸின் செல்வபெருந்தகை எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த தெகலான் பாகவி ஆகிய ஏராளமானவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரலில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து மதுரை கோரிப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் குவிந்ததால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மாணவிகள் கூடி குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தேனி மாவட்டம் போடி வள்ளுவர் சிலை அருகே இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தால் பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உண்மையில் இந்த சட்டம் இந்தியர்களுக்கு எதிரானது என குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகரில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், சிவகங்கை, நாகை, தேனி, பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.