குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை கொன்ற கொடூர கணவர்..!
குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை கொலை செய்த கணவனை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை விராலிமலை பாத்திமா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 17ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான பானுரேகா என்பது தெரியவந்தது. பானுரேகா கொல்லப்பட்டது குறித்து அவரின் தந்தை அழகர் விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பானுவின் கணவர் ராஜ்குமாரே கொலையாளி என்பது தெரியவந்தது. திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் குழந்தை பிறக்கவில்லை என்று கூறி தமது மனைவியை கொலை செய்ததாக விசாரணையின்போது ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

குழந்தை வரம் வேண்டி மனைவியோடு இருசக்கர வாகனத்தில் சமயபுரம் சென்று வழிபட்டு திரும்பும்போது கொலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சமயபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லலாம் என கூறியதாகவும், வழியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பாத்திமா நகர் நெடுஞ்சாலை ஓரத்தில் வைத்து கொலை செய்து உடலுக்கு தீ வைத்துவிட்டு திரும்பி வந்ததாகவும் ராஜ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜ்குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




