உலக அழகிப் பட்டம் வென்ற 23 வயது ஜமைக்கா பெண்..! இந்திய பெண் 3-வது இடம்!!!

இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

 

வருடா வருடம் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டு அந்த ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வது வழக்கம். 2019-ம் ஆண்டிற்கான உலக அழகியை தேர்வு செய்வதற்காக 69-வது உலக அழகிப் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்றது.

 

இதில் இந்தியாவின் சுமன் ராவ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜமைக்கா நாட்டின் டோனி ஆன்சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்ஸி மெசினோ, இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் ஆகியோர் முன்னேறினர்.

 

இறுதிச் சுற்றில், இவர்களிடம் அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஜமைக்காவின் 23 வயதான டோனி ஆன் சிங் உலக அழகியாக மகுடம் சூடினார். பிரான்சின் ஓப்ஸி மெசினோ 2-வது இடத்தையும், இந்தியாவின் சுமன் ராவ் 3-வது இடத்தையும் கைப்பற்றினர்.

 

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டோனி ஆன்சிங், கரீபிய நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் பிறந்தவர். 9 வயதாக இருக்கும் போது பெற்றோருடன் அமெரிக்காவின் புளோரிடா நகருக்கு குடிபெயர்ந்த டோனி ஆன் சிங், பெண்கள் நலன் மற்றும் மனோதத்துவத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். உலகிலேயே இவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்று கேட்டதற்கு, தனது தாய் தான் என்று நச்சென்று பதில் அளித்துள்ளார்.


Leave a Reply