இந்தியாவில் வெங்காய விலை 200 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பக்கத்து நாடான பாகிஸ்தானில் வெங்காய விலை சற்றுக் குறைய தொடங்கியுள்ளது. வெங்காய உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
கடந்த செப்டம்பர் மாதத்தில் வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி விட்டாலும் வெங்காய தட்டுப்பாடு தொடங்குவதற்கு முன்பு வெங்காய ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருந்தது இந்தியா. இருப்பினும் தற்போது டெல்லியில் வெங்காய விலை 200 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அண்டை நாடுகளில் வெங்காய விலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை ஒரு இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. அந்த தகவலின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் வெங்காய விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெங்காய விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளது. ஓராண்டில் சராசரியாக 384.8 சதவீதம் இந்தியாவில் வெங்காய விலை ஏறியுள்ளது. பாகிஸ்தானில் ஓர் ஆண்டில் 207.3% மட்டும் சராசரியாக உயர்ந்திருக்கிறது.
டிசம்பர் 7ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் இருக்கும் விலையை கொண்டு சராசரி எடுத்தால் இந்திய ரூபாய் மதிப்பின் படி இந்தியாவில் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் பாகிஸ்தானில் கிலோ 28 ரூபாய்க்கு விற்கிறது.
அதாவது இந்தியாவில் வெங்காயம் விற்கும் விலையில் பாதி விலையிலேயே பாகிஸ்தானில் விற்கப்படுகிறது. இத்தனைக்கும் இந்தியா ஆண்டுக்கு ஆயிரத்து 942 கோடி கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்கிறது. பாகிஸ்தானோ 174 கோடி கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்கிறது.
இருப்பினும் பாகிஸ்தானில் மக்கள் தொகைக்கு ஏற்ப அதன் உற்பத்தி இருப்பதால் பாகிஸ்தானால் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்து இருப்பதாக சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வெங்காயத்திற்காக இந்தியாவை சார்ந்து பாகிஸ்தான் இல்லாததும் அந்நாட்டின் விலையில் பெரிய ஏற்றம் ஏற்படாததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு வெங்காய ஏற்றுமதி செய்யும் எகிப்திலிருந்து இந்தியா வெங்காய இறக்குமதியை அதிகப்படுத்தி இருப்பதால் பாகிஸ்தானும் விரைவில் இந்தியாவை போல பெரிய விலையேற்றத்தை சந்திக்கலாம் என்கிற கணிப்பு முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவில் வெங்காய விலை ஏற்றம் மற்ற நாடுகளில் பிரதிபலிக்க தொடங்கியிருக்கும் நிலையில் வெங்காய விலையேற்றம் கட்டுக்குள் வராவிட்டால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.