நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும், பிரச்சாரத்தில் ரஜினி மன்றத்தின் கொடியையோ, ரஜினியின் பெயரையோ, படத்தையோ யாரும் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதோ வருகிறேன் … அதோ வருகிறேன்… என்பது போல அரசியலில் குதிக்கப்போவதாக கடந்த கால் நூற்றாண்டாகவே பாவ்லா காட்டி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .ஒரு வழியாக கடந்த 2017 டிசம்பரில் தனது ரசிகர்களைத் திரட்டிய ரஜினி, அரசியலில் குதிக்கப் போவது உறுதி என்றும், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என்றும், தனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் ரஜினி அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றி, மன்ற கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால் கட்சி தொடங்குவதாக ஆரம்பித்து 2 வருடங்கள் ஆன நிலையில் இன்னும் ஆரம்பித்தபாடில்லை.
இடையில் இந்தாண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் நடந்த போதும் ரஜினி அமைதி காத்ததுடன், யாருக்கும் ஆதரவில்லை என்றும், தமது பெயரையோ, மன்றத்தின் கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி விட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினி, தமிழக முதல்வராவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருப்பாரா? அது போல தமிழக அரசியலில் அதிசயம், அற்புதம் நிகழும் என்று பஞ்ச் டயலாக் பேசியது பெரும் பரபரப்பானது.அத்துடன் கமலுடன் இணைந்து ரஜினி அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற பேச்சுகளும் எழுந்தது. இதற்கு, தமிழக மக்களின் நலனுக்காக அவசியம் ஏற்பட்டால் இருவரும் இணையத் தயார் என்று கமலும், ரஜினியும் கூறி பரபரப்பை கூட்டினர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களம் காண உள்ள நிலையில், இன்னும் கட்சியே தொடங்காத ரஜினி, கமலுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தான், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரசிகர் மன்றத்தின் பெயரிலோ,மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் எச்சரிக்கை விடுப்பது போல் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது எனக் கூறி உற்சாகப்படுத்தியிருந்தார். இதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏதேனும் அதிரடி அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலிலும் கைகளைக் கட்டிப் போட்டு, வாய்ப்பூட்டும் போட்டது போல அமைதி காக்குமாறு ரஜினி தரப்பில் கூறியுள்ளது அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.