சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜபாண்டி.
இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று ப்ளு டுத் விலைகளை கேட்டுள்ளார். ஆன்லைனில் குறைந்த விலையில் விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி பேசும்போது கடை உரிமையாளர் முத்துவேல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் இணை ஆணையர் அலுவலகத்தில் செல்போன் கடை உரிமையாளர் முத்துவேலு புகார் அளித்ததையடுத்து உதவி ஆய்வாளர் ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.