நாட்டை இழிவுபடுத்த முயற்சிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பல் தாக்குதல்களை தடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களின் மீது முசாபர்பூர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எந்த அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை பதில் அளித்துள்ளது. அதன்படி நாட்டை இழிவுபடுத்த முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், காவல்துறை விசாரணைக்கு பிறகு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப் பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
கருத்துக் கூறுவோர் மீது தேசத் துரோக வழக்கை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறதா என்ற கேள்விக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என மத்திய உள்துறை கூறியுள்ளது.