மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என புகழாரம் சூட்டுவதா..? பி.டி.அரசகுமாருக்கு தடை போட்டது தமிழக பாஜக!!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழ்ந்த தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமாருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அது வரை அவர் கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்கவும் தமிழக பாஜக தடை போட்டுள்ளது.
புதுக்கோட்டையில், திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், திமுக முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று, மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
விழாவில் பேசிய பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, உள்ளாட்சிகளில் நல்லாட்சி தந்த நாயகன், என்றைக்கும் எங்களின் நிரந்தர தலைவராக உள்ள அன்புத் தளபதி என ஆஹா, ஓஹோ என புகழ்ந்து பேசினார். அத்துடன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் அரச குமார் புகழாரம் சூட்டியது தமிழக பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் அரச குமாரின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.இது தொடர்பாக நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.டி.அரசகுமாரின் பேச்சு குறித்து கட்சியின் மேலிடத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலிடம் முடிவு எடுக்கும் வரை, கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், ஊடக விவாதங்களில் பி.டி.அரசகுமார் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை, அரசகுமார் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசிய வீடியோ வும் சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது. இதற்கு பதிலடியாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பி.டி.அரசகுமாரை, பிழைப்புக்காக அண்டிப் பிழைப்பவர் என்று ஏகத்துக்கும் விமர்சித்து பதிவிட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




