பொது விழாக்களில் பொய் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் முதலமைச்சரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி சீரழிவிலிருந்து மீட்கத் தான் திமுக ஆட்சியில் மேயர் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின், 2011ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை தொடரும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளில் நிலை என்னவென்று வினவியுள்ளார்.
திடீர் அவசரச்சட்டம், தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம், வார்டு வரையறைகளின் குளறுபடி, பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு திமுக மீது பழி போடுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
எனவே திமுக மீது பழிபோடும் போக்கை கைவிட்டு வகிக்கின்ற பொறுப்புக் ஏற்ப பொய்களை தவிர்த்து உண்மையை பேசுங்கள் என முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.