நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொதுவாக அஜீத் படத்தின் தலைப்புகள் முதலிலேயே அறிவிக்கப்படுவது இல்லை. இறுதிக்கட்டம் வரை அந்த படத்தின் தலைப்பு குறித்து ஒரு ரகசியம் காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்தமுறை படத்தின் தலைப்பு தொடக்கத்திலேயே வழக்கத்திற்கு மாறாக அறிவிக்கப்பட்டது.
சில வருடங்களாக அஜித் படங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யுக்தியை இயக்குனர் வினோத் முதன்முறையாக உடைத்துள்ளார். இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக நிரௌஷா பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் போலீஸ் உடையுடன் கலந்து கொண்டதை பலரும் அறிவர். அதேபோல் கிளீன் ஷேவ் செய்த முக தோற்றத்தில் அஜீத் இடம்பெற்ற புகைப்படமும் சில நாட்கள் முன்பாக கசிந்தது. இந்நிலையில் அஜீத்தின் இன்னொரு தோற்றம் சம்பந்தமான புகைப்படம் ஒன்று வெளியே கசிந்துள்ளது.
ஆகவே அதை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு தோற்றம் உறுதியாகியுள்ள நிலையில் இளமை தோற்றத்தில் உள்ள அஜீத்தின் இன்னொரு வேடமாக படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அந்த இளம் தோற்றம் வழக்கம்போல் பிளாஷ்பேக் என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.