பிக்பாஸ் சீசன் – 1 நடிகையை கண்டித்து போராட்டம்!

திருமாவளவனுக்கு எதிராக அவதூறாக டுவிட்டரில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

 

நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவிட்டு, அதற்கு எதிர்ப்பு வந்த பின்பு அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

 

காயத்ரி ரகுராமை கண்டித்து சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல கூறியதால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே போராட்டம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து திருமாவளவன் பேசி வருவதாகவும், தற்போது அவரது ஆட்களை விட்டு தன்னை தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் தான் பயப்பட மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் தனது மாற்றத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு பதிவில் வரும் 27ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு தான் தனியாக செல்ல உள்ளதாகவும், அங்கு இந்து மதத்தைப் பற்றி தவறாக பேசி வருபவர்களிடம் விவாதிக்க தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply