மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேற்று இரவே மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அருண் ஜெட்லியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவர்கள் குழுவிடம் அவர் நீண்ட நேரம் ஜெட்லியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, ‘அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைக்கிறது’ என்றார்.