வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்து வரும் தேர்தலில் காலை முதலே வாக்குப் பதிவு மந்தமாக இருந்துவருகிரது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 62.94% சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்தும் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர். ஏ.சி. சண்முகம் அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்.இதுதவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கியது. மாலை ஆறு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 133 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், துவக்கத்திலிருந்தே வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது. காலை 11.15 நிலவரப்படி வேலூர் தொகுதியில் 14.61 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. பிறகு பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி, 52.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
மாலை ஐந்து மணி நிலவரப்படி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 62.94 சதவீத வாக்குகளை பதிவாயிருக்கின்றன. அதிகபட்சமாக அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 67.61 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக வாணியம்பாடியில் 52 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 58.55 சதவீத வாக்குகளும் கே.வி. குப்பம் பகுதியில் 67.1 சதவீத வாக்குகளும் குடியாத்தத்தில் 67.25 சதவீத வாக்குகளும் ஆம்பூரில் 65.17 சதவீத வாக்குகளுமே பதிவாயிருக்கின்றன.
காலையிலிருந்தே வாக்குப் பதிவு மந்தமாக இருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கோடை காலங்களில் தேர்தல் நடக்கும்போது வெயிலுக்கு முன்பு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்கள் வருவார்கள். அதனால் காலையில் வாக்குப் பதிவு அதிகமாக இருக்கும் ஆனால், இப்போது பருவநிலை நன்றாக இருப்பதால் எந்த நேரமும் வந்து வாக்களிக்கலாம் என நினைக்கிறார்கள். ஆகவே வாக்குப்பதிவு நேரம் முடிவடையும்போதுதான் எந்த அளவுக்கு வாக்குப் பதிவு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமெனக் கூறினார்.
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றபோது சுமார் 30 எந்திரங்கள் பழுதாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. விரும்பத்தகாத சம்பவங்களோ, வன்முறைச் சம்பவங்களோ இதுவரை ஏதும் நடைபெறவில்லை.
திங்கள்கிழமை நடக்கும் இந்த வாக்குப் பதிவுக்காக, வேலூரில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளியூரில் வேலை செய்கிற வேலூர் தொகுதி வாக்காளர்கள் விடுமுறை பெற்று வருவது கடினம் என்பதால் வாக்குப் பதிவு சதவீதம் குறையக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.