காஷ்மீர் விவகாரம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என காங்கிரஸ் கண்டனம்!

காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களைக் கொண்டதாக இருந்தது. இந்தியாவோடு இணைவதா ? பாகிஸ்தானோடு இணைவதா என்று முடிவெடுக்கும் உரிமையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சமஸ்தானத்திடம் விட்டுவிட்டனர்.

 

இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த போது பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் தெளிவாக ராஜதந்திரத்தோடு பிரச்சினைகளை அணுகி, இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள். ஆனால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மகாராஜா ஹரிசிங் என்ற இந்து மன்னர் காஷ்மீரை ஆட்சி செய்தார். இதில் 90 சதவீத மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தார்கள். இவர்களின் தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார்.

 

இந்தியாவோடு இணைக்கக் கூடாது என்று காஷ்மீர் மக்களை முகமது அலி ஜின்னா மதரீதியாக ஆதரவு திரட்ட முற்பட்டார். இது காட்டுத்தீ போல் காஷ்மீர் முழுவதும் பரவியது. இத்தகைய ஆபத்தான சூழலில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு பிரதமர் நேரு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் ஷேக் அப்துல்லா. இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

 

இதில் வி.பி. மேனன் என்கிற அதிகாரி மகாராஜா ஹரிசிங்கை சந்தித்து இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தைப் பெற்றார். இந்த இணைப்பின் போது காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளை ஏற்று சில சிறப்பு சலுகைகள் நமது அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டது. பிரிவினைவாதத்தை ஒடுக்குவதற்காக அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ன்கீழ் கூடுதலான அதிகாரமும், தன்னாட்சி அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், தகவல் துறை ஆகிய மூன்று துறைகளை தவிர்த்து, மற்ற துறைகளில் பாராளுமன்றம் தலையிட காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். அதனடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக அடிப்படையிலும், அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டும் அரசுகள் இயங்கி வருகின்றன.

 

இந்தச் சூழலில் மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசமைப்புச் சட்டம் 370-ஐ ரத்து செய்கிற மசோதாவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கனவே குடியரசுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஆணை பிறப்பித்திருக்கிறார். இதன்படி ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என்று தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழக்கிறது. இதை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் மிருகபல மெஜாரிட்டியை கொண்டு நிறைவேற்றி விடலாம் என்ற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

 

கடந்த 2018 ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு தற்காலிகமானது அல்ல, ஆனால் நிரந்தரமானது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கும் உத்தரவு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. இந்த முடிவை எதிர்த்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு, முறியடிப்பார்கள் . இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.


Leave a Reply