மதத்தை காரணம் காட்டி உணவை வாங்க மறுத்தவருக்கு காவல் துறை நோட்டீஸ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதத்தின் பெயரால் துவேஷத்தை பரப்ப முயற்சித்ததாக ஸொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவருக்கு மாநில காவல்துறை வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்தவர் அமித் சுக்லா.

 

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஸொமாட்டோ செயலியில் தனக்கு உணவு ஆர்டர் செய்தார். அதன்படி அந்த உணவை அமித் சுக்லாவிடம் ஒப்படைக்க ஸொமாட்டோ நிறுவன ஊழியர் (டெலிவரி பாய்) வந்தார். அந்த நபர் ஹிந்து அல்லாதவர் என்று காரணம் காட்டி தனது உணவுக்கான ஆர்டரை ரத்து செய்த அமித் சுக்லா, அதைக் கொண்டு வந்த ஊழியரை திருப்பி அனுப்பினார்.

 

மேலும், வேறு ஒரு ஊழியர் மூலமாக தனக்கான உணவை அனுப்பி வைக்குமாறு ஸொமாட்டோ நிறுவனத்தை வலியுறுத்தினார்.அமித் சுக்லா தனது இந்த நடவடிக்கையை சுட்டுரையில் பதிவிடவும் செய்தார். அந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச காவல்துறை, சம்பவம் தொடர்பாக அமித் சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

மதத்தின் பெயரால் துவேஷத்தை பரப்ப முயற்சித்த அமித் சிங், இனி சமூக, மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை எழுத்துப்பூர்வ உறுதிமொழியாக அளிக்குமாறு அறிவுறுத்தி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அத்துடன் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.அமித் சுக்லா வீடு அமைந்துள்ள பகுதிக்குள்பட்ட, கார்ஹா காவல் நிலையத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சிங் கூறினார்.


Leave a Reply