மேடையிலேயே பார்வையாளர் முன்னிலையில் இறந்த காமெடியன் மஞ்சுநாத் நாயுடு

துபாயில் மேடையில் நின்று கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தபோது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு உயிர் இழந்தார். அபுதாபியில் பிறந்தவர் மஞ்சுநாத் நாயுடு(36). ஸ்டாண்ட் அப் காமெடியன். அவர் துபாயில் வசித்து வந்தார்.

 

அவர் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையில் நின்று காமெடி செய்தார்.அப்பொழுது அவர் தனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என்று கூறி மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் அதில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அதை பார்த்த பார்வையாளர்களோ அவர் நகைச்சுவை செய்கிறார் என்று நினைத்துவிட்டனர்.

 

இது குறித்து நாயுடுவின் தோழரும், சக காமெடியனுமான மிக்தாத் கூறியதாவது, அவர் தான் கடைசியாக காமெடி செய்தார். அவர் மேடைக்கு சென்று கதைகள் கூறி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அவர் தன் அப்பா மற்றும் குடும்பத்தார் குறித்து பேசினார். அதன் பிறகு தனக்கு மனஉளைச்சல், பதட்டம், கவலை இருப்பது குறித்து பேசினார். அது குறித்து பேசத் துவங்கியதும் அவர் நிலைகுலைந்துவிட்டார்.

அவர் இறந்தது தெரியாமல் நடிப்பு என்று மக்கள் நினைத்துவிட்டனர். அவர் தனக்கு பதட்டம் இருப்பது குறித்து பேசியபடியே விழுந்து இறந்ததால் மக்கள் அதை காமெடி என்று நினைத்துவிட்டனர்.அவரின் பெற்றோர் உயிருடன் இல்லை. ஒரு சகோதரர் மட்டும் உள்ளார்.

 

அவரின் உறவினர்கள் யாரும் துபாயில் இல்லை. கலை மற்றும் காமெடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அவரின் குடும்பம். எங்களை தவிர அவருக்கு வேறு யாரும் இல்லை என்றார். மஞ்சுநாத் நாயுடு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply