இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து- அண்ணன்,தம்பி இருவா் பலி…

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தொழில் நிமித்தமாக முத்துக்குமார் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இன்று காலை திருப்பூரில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம் கருமத்தம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் இவர்களது இருசக்கர வாகனம் பின்னால் பலமாக மோதியது.இதனால் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த முத்துக்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து சடலங்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் கார் வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இவர்களது வாகனம் மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி பிஜு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விபத்தில் அண்ணன்,தம்பி சகோதரர்கள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளன.இதனால் வாகனப்போக்குவரத்து அதிகம்.வாகனப்போக்குவரத்திற்கேற்ப காவல் துறையினர் பணியில் கூடுதலாக அமர்த்தப்பட வேண்டும் எனவும்,விபத்துக்களை தடுக்கலாம் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும்,சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாலை விபத்துக்கள் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.அவ்வாறு விபத்தில் பலியாவோரை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.அப்படி விபத்தில் சிக்குபவர்களின் பிரேத பரிசோதனைக்காக கோவை கொண்டு செல்லும் பொழுது இறந்தோரின் உறவினர்கள் கோவைக்கு அலைந்து திரியும் அவல நிலையும் உள்ளது.

 

இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு சூலூர் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைக்கூடம் அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கருத்தில் கொள்ளுமா அரசு ?…


Leave a Reply