தென்மேற்கு பருவமழை இந்தாண்டு தாமதமாகும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை, 5 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், இம்முறை நாடு முழுவதும் கடும் வெப்பம் வீசி வருகிறது. அனல் காற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 5 நாட்கள் தாமதமாகவே ஆரம்பிக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும்.

 

எனினும், அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகள், அதை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா பகுதிகளில், பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளதாக, அது தெரிவித்துள்ளது. அதன்படி, மே 18 அல்லது 19 தேதிகளில், அங்கு தென்மேற்கு பருவ மழை தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்தில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.


Leave a Reply