முதலுதவி செய்து கொலை வழக்கில் சிக்கிய பிரபல தமிழ் எழுத்தாளர்! விசாரிக்காமல் வழக்கு பதிந்த போலீஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


சென்னையில், வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பிரபல தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டார். போலீசார் சரிவர விசாரிக்காமல் சிசிடிவி அடிப்படையில் கைது செய்தது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

பிரபல எழுத்தாளர் ஜே பிரான்சிஸ் கிருபா. இவர், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 7 கவிதை தொகுப்புகள் உட்பட புதினம், கட்டுரைகள், சினிமாவுக்கு வசனம் உள்ளிட்டவை எழுதியுள்ளார். அழகர்சாமியின் குதிரை உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். பைரி எனும் படத்தில் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து வரும் இவர் சென்னை கே.கே.நகரில் தங்கியுள்ளார்.

 

 

இவரை, சென்னை கோயம்பேட்டில் மது போதையில் வட மாநில இளைஞரை கொன்றதாக, சிலர் அளித்த புகாரின் பேரின் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, தாம் கொலை செய்யவில்லை; முதலுதவி செய்ய முயன்றேன் என்று அவர் கூறியும் போலீசார் அதை பொருட்படுத்தவில்லை. காரணம், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் வட மாநில இளைஞரின் நெஞ்சை, பிரான்சிஸ் கிருபா அமுக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

 

போதாக்குறைக்கு, சினிமா ஒன்றில் நடிப்பதற்காக, எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, தாடியுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், போலீசார் அவரது பேச்சை நம்பத் தயாராக இல்லை. அவர் மீது, இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 

இதற்கிடையே, பிரான்சிஸ் கிருபா கைதான தகவல் அறிந்து, எழுத்தாளர்கள், அவரது நண்பர்கள் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு விரைந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறினர்.

 

இந்த நிலையில் தான், பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கை வந்தது. அதில், இறந்தவருக்கு வலிப்பு உண்டாகி, அதனால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டு இருந்தது. உயிரிழந்தவர் மிதின் பவுல் எனும் அசாம் மாநில தொழிலாளி என்பதும் உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து, கொலை வழக்கு என்ற சட்டபிரிவை நீக்கி இயற்கை மரணம் -174 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிந்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை போலீசார் விடுவித்தனர்.

 

சினிமா ஒன்றுக்காக தாடி வளர்த்து, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா.

 

போலீசார் சரிவர விசாரிக்காமல், தெளிவற்ற சிசிடிவி காட்சிகளை மட்டுமே நம்பி விசாரணை நடத்தியது, இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற முதலுதவி செய்தால், சிக்கல் தான் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தை காவல் துறையினரின் செயல்பாடுகள் ஏற்படுத்திவிட்டன.

 

இனியேனும் இதுபோன்ற தவறுகள் நேராத வண்ணம், அப்பாவிகள் தண்டிக்கப்படாத வண்ணம் காவல்துறையினர் செயல்பட வேண்டும். சிசிடிவி காட்சிகளை மட்டுமே நம்பி நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்பதை உணர வேண்டும்.


Leave a Reply