நெருப்பில்லாமல் புகையாது என்பது போல், மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்துள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்த நிலையில், அது நிஜம் தான் என்பது போன்ற ரகசிய நிகழ்வுகள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், 22 தொகுதி சட்டசபைகளுக்கும் இடைத்தேர்தல்; அதை தொடர்ந்து மே 23இல் முடிவுகள் வெளியாகின்றன. மக்களவை தேர்தல் முடிவை விட, இடைத்தேர்தல் முடிவுகள் தான் ஆளும் அதிமுகவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாவிட்டால், ஆட்சியை இழக்க நேரிடும்; ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்தால், அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை, அதிமுக கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஆனால், இவ்வளவு பலவீனமாக அதிமுக இருக்கும் போதே ஆட்சியை பிடித்தால் தான், முதல்வர் பதவி என்ற கனவு நனவாகும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். எனவே, இடைத்தேர்தல் முடிவுகள் ஒருவேளை அதிமுகவுக்கு சாதமாகிவிட்டால், அதன் பலனை அனுபவிக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகங்களில் அவர் இறங்கிவிட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, சசிகலா குடும்பம் வசம் அதிமுகவும், ஆட்சியும் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சசிகலா சிறைக்கு சென்றதால் எல்லாமே தலைகீழாக மாறியது. அதன்பின அதிமுக சிதறுண்டு போகும் என்ற பலர் நினைத்திருக்க, சாதுர்யமாக காய்களை நகத்தி, அதிமுகவையும், ஆட்சி அதிகாரத்தையும் ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் வசமாக்கினார். அதன் பின் நடந்த சட்டப் போராட்டங்களிலும், அவருக்கே ஜெயம் கிடைத்தது.
இதை சற்றும் எதிர்பாராத டிடிவி தினகரன், வேறுவழியின்றி அ.ம.மு.க.வை துவக்கினார். அவருக்கென்று அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கும், வசீகரமும் இருந்த போதும், தனி மரமாக நிற்பதால், எடுபடாமல் போகிறது. வரும் இடைத்தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனுக்கான செல்வாக்கை, அவரது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்டாலின், தினகரன் இருவரின் தற்போதைய ஒரே நோக்கம், அதிமுக அரசை அகற்றுவது என்பது மட்டும் தான். இதற்கு, தனியே அரசியல் களத்தில் நிற்பது முதல்வர் பழனிச்சாமிக்கும், அதிமுகவுக்குமே சாதகமாகிவிடும் என்பதை, அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் , 35 பேரை வெளியே இழுப்பதன் மூலம், ஆட்சியை ஆட்டம் காணச்செய்யலாம் என்ற திட்டத்துடன், ஸ்டாலினுடன் அ.ம.மு.க.பொ துச்செயலர் தினகரன் ரகசியமாக கைக்கோர்த்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது திமுகவுக்கு 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க வேண்டுமானால், இன்னமும் 29 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்; ஆனால், இருப்பதோ, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் என 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தான். 117 எம்.எல்.ஏ.,க் கள் இருந்தால் தான் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும் என்பது தான் யதார்த்த நிலை.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அதில் 22 சட்டசபை தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறமுடியாது; அதற்கான வாய்ப்பும் குறைவு. எனவே தான், அ.ம.மு.க. உதவியை ரகசியமாக திமுக நாடியிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் வீட்டில், தினகரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சந்தித்து, இந்த யோசனை பற்றி பேசியதாக, பேச்சு உலவுகிறது.
அதன்படி, அதிமுகவில் உள்ள, தினகரன் ஆதரவு ஸ்லீப்பர் செல் மூலம், எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் பேசும் படலம் துவங்கிவிட்டதாகவும்; இது, உளவுத்துறை மூலம் அதிமுக தலைமைக்கு சொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதை தடுக்க, அதிரடி திட்டங்களை வகுத்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும், அதன் மூலம் ஸ்டாலின், தினகரன் தரப்பு தலைதூக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதில், அதிமுகவுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக, மீண்டும் ஆட்சியில் அமருவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எல்லோரும் தேர்தல் முடிவுகளுக்காக மே 23ஆம் தேதிக்காக காத்திருக்க, அதற்கு பிறகு இங்குள்ள அரசியல் களம், எதிர்பாராத பல திருப்பங்களை காணும் என்பது மட்டும் நிச்சயம்.